கூட்ட நெரிசல் அதிகரிப்பு, ஒமிக்ரான் தொற்று பீதி எதிரொலி மீண்டும் முதல் வகுப்பு பெட்டியுடன் மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும்: நிர்வாகத்திடம் பயணிகள் வலியுறுத்தல்; தொற்றை தடுக்க நடவடிக்கை என அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளாதால், இயல்பு நிலை திரும்பிய காரணத்தால் மெட்ரோ ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் செல்கிறது. ஒமிக்கிரான் தொற்று பரவி வரும் நேரத்தில், நெரிசலான பெட்டிகளில் பயணிப்பதன் மூலம் தொற்று பரவக்கூடும் என பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் முதல் வகுப்பு பெட்டிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த நேரத்தில், நெரிசலான பெட்டிகளில் பயணிப்பதன் மூலம் கொரோனா அல்லது ஒமிக்கிரான் தொற்று பரவக்கூடும் என்று ரயில் பயணிகள் பலரும் அஞ்சுகின்றனர். இதனால் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) முதல் வகுப்பு பெட்டியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, மெட்ரோ ரயில்களில் தினசரி அலுவலகத்திற்கு செல்பவர்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர். பீக் ஹவர்ஸில் ரயில்களில் கூட்டம் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளது. எனவே, சமூக இடைவெளியை கடைபிடிக்க போதுமான இடமில்லை. தற்போதைய நிலவரப்படி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய தினசரி சராசரியான 1.16 லட்சத்தில் 90 சதவீதத்தை தொட்டுள்ளது. சில சமயங்களில் அது ஒரு நாளைக்கு 1.4 லட்சத்தை எட்டுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் பயணிகள் கூறியதாவது: விம்கோ நகரிலிருந்து வரும் ரயில்கள் சென்ட்ரல் மெட்ரோவுக்கு வரும்போது ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. சென்ட்ரல் மெட்ரோவிற்கும் எல்ஐசிக்கும் இடையே ​​நிற்க கூட இடம் இல்லை. சமூக இடைவெளியைப் பின்பற்ற வழி இல்லை. அதற்கு மேல், சிலர் தங்கள் மாஸ்க் சரியாக அணிவதில்லை. எனவே சிஎம்ஆர்எல் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இரண்டு மடங்கு விலை கொண்ட டிக்கெட் மற்றும் சமூக இடைவெளியுடன் பயணிக்க தயாராக இருக்கும் மக்களுக்கு மீண்டும் முதல் வகுப்பு பெட்டிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வது பாதுகாப்பானது. ஏனெனில் பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக அப்பெட்டியில் சமூக இடைவெளியை எளிதாக கடைபிடிக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு, சிஎம்ஆர்எல் முதல் வகுப்புப் பெட்டியை பெண்கள் மட்டுமே செல்லும் பெட்டியாக மாற்றியது. இது பயணிகளுக்கு சமூக இடைவெளியை பராமரிக்க போதுமான இடத்தை வழங்குகிறது. பீக் ஹவர் கூட்டத்தை தவிர்க்க ஒரு மணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷனை அடையத் தொடங்கியிருக்கிறோம். முன்பு காலை 8.45 மணிக்கு ஸ்டேஷனுக்கு சென்றோம். இப்போது, ​​7.45 மணிக்கு அங்கு இருக்கிற வேண்டிய நிலை உள்ளது. புறநகர் சேவைகளை போல் மெட்ரோ ரயில் நிரம்பியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான வழித்தடம் திறக்கப்பட்டு டிக்கெட் விலை குறைக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2021ல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதில் இருந்து பல மாதங்களில் படிப்படியாக பயணிகளின் அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் சராசரியாக தினமும் 97,000 பேர் பயணம் செய்தனர். இந்த மாதத்தில் தினசரி சராசரி எண்ணிக்கை இப்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

டிசம்பர் 10ம் தேதி அன்று அதிகபட்சமாக 1.42 லட்சத்தை தொட்டது. இதனால் பீக் ஹவர் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கோவிட் விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய சிறப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எங்களது பறக்கும் படையானது அவ்வப்போது சிசிடிவி மூலம் பெட்டிகளைச் சரிபார்த்து, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயிலுக்குள் சென்று, மாஸ்க் கழற்றிய பயணிகளிடம் அவற்றை சரியாக அணியச் சொல்கிறார்கள். சமூக இடைவெளியை கண்காணிக்கிறோம். எனவே, மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயிலின் உள்ளே ஒரே இடத்தில் அதிகம் கூட்டம் இருப்பதை பறக்கும் படையினருக்கு தெரிவித்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறோம்’ என்றனர்.

Related Stories: