லக்கிம்பூர் கெர்ரியில் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி: சிறப்பு புலனாய்வுக்குழு பரபரப்பு அறிக்கை

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரியில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதிச்செயல் என்று சிறப்பு புலனாய்வுக்குழு தெரிவித்திருக்கிறது. திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அக்டோபர் 3- ஆம் தேதி  லக்கிம்பூர் கெர்ரியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. அப்போது, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா பயணம் செய்த ஜீப் விவசாயிகள் மீது மோதியது. இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதின் பின்பு ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  

ஒன்றிய அரசு அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பின. சில நாட்கள் தலைமறைவாக இருந்த ஆஷிஷ் மிஸ்ரா, காவல் நிலையத்தில் சரணடைந்தார். தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்த நிகழ்வை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என்று கூறியுள்ளது. இதனால் ஆஷிஷ் மிஸ்ராவிற்கும், அவருடன் கைதானவர்களுக்கும் சிக்கல் அதிகரித்திருக்கிறது. விவசாயிகள் கொல்லப்பட்டதில் தனது மகனுக்கு தொடர்பு இல்லையென்று கூறி வரும் அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.            

Related Stories: