வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழா; ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.! திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடந்தது. பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை கொண்டது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது வைகுண்ட ஏகாதசி விழா. இந்தாண்டு இந்த விழா கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து  4ம் தேதி பகல்பத்து உற்சவம் துவங்கியது.  ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியான இன்று (14ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார். ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றார். அதற்கு முன்னதாக நம்பெருமாள் விரஜாநதி நாலுகால் மண்டபத்தில் பட்டர்கள் வாசித்த வேதவிண்ணப்பங்களை  கேட்டருளினார். இதைதொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசலை நம்பெருமாள் கடந்தார். கோயில் ஊழியர்களின் ரங்கா, ரங்கா கோஷத்துடன் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சந்திர புஷ்கரணி குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள் வழியாக ஆலநாடான் திருச்சுற்றில் உள்ள மணல் வழியாக அகளங்கள் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் காலை 5 மணி முதல் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து காலை 7 மணி முதல் பொதுஜன சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.  சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து ராப்பத்து முதல் நாள் உற்சவம் இன்று துவங்கியது. இரவு 11.30 முதல் 12 மணி வரை சுவாமி புறப்பாட்டுக்கு திரையிடப்படுகிறது. இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. நாளை அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். வரும் 23ம் தேதி வரை பக்தர்கள் பரமபதவாசல் மற்றும் மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதிக்கப்படுவர்.   23ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி வரை உற்சவர் நம்பெருமாளை தினம்தோறும் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்.

சிரமமின்றி பக்தர்கள் தரிசனம்

ஒவ்வொரு ஆண்டும் சொர்க்கவாசல் திறப்பு நாளன்று அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தாண்டு கோயில் வளாகத்துக்குள் குறைந்த அளவிலான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் சொர்க்கவாசலை நம்பெருமாள் கடப்பதற்கு முன் சில அடி தூரத்தில் போலீசார் கயிற்றை கட்டி தடுத்து வைத்திருப்பர். சொர்க்கவாசலை நம்பெருமாள் கடந்த பின்னர் அந்த கயிற்றை அவிழ்த்து விடுவர். ஆனால் இந்தாண்டு சொர்க்கவாசல் திறப்பின்போது போலீசார் கயிற்றை கட்டி தடுப்பு ஏதும் அமைக்கவில்லை.

திடீர் சாரல் மழை

காலை 6 மணி முதல் கோயிலின் வெளியே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அந்த நேரத்தில் திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசத்துக்கு ஆளாகினர்.

Related Stories: