ராஜபாளையத்தில் குப்பைகளை குவிப்பதால் மாசடையும் நீர்நிலைகள்-பாசன விவசாயிகள் வேதனை

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நீர்நிலைகளில் குப்பைகளை குவிப்பதால், அவைகள் மாசடைகின்றன. இதனால், பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரானது, நீர்வரத்து ஓடைகள் மூலம், ராஜபாளையம் பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்களில் நிரம்புகின்றன. இந்த நீர்நிலைகள் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜபாளையத்தில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள், கட்டிடக் கழிவுகளை அருகில் உள்ள கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கொட்டுகின்றனர்.

இதனால், நீர்நிலை மாசடைகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், சமீபத்தில் பெய்த மழையால் நீர்நிலைகளில் அதிக தண்ணீரை சேமிக்க முடியவில்லை. நகரில் அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகமாக இருந்தும், குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டுகின்றனர்.

மேலும், நீர்நிலைகளில் அருகில் குடியிருப்போருக்கு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. பாசனத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, நீர்நிலைகளில் குப்பைகள், கட்டிடக் கழிவுகளை கொட்டுவோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: