கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்தினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ5000 கோடி வருவாய்: எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டாக பேட்டி

சென்னை:  கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்தினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5000 கோடி வருவாய் கிடைக்கும் என்று அனைத்து எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு யுவராஜ், நாராயணன்(தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி நல சங்கம்), காஞ்சி எஸ்.தீனன்(தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம்), எஸ்.ஜெயராமன் (காஞ்சிபுரம்-திருவள்ளூர் டிப்பர் லாரி சம்மேளனம்), ஆர்.பன்னீர் செல்வம்( தமிழ்நாடு மணல் லாரி ஒருங்கிணைப்பு நல சம்மேளனம்), ஆர்.முனிரத்தினம்(தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம்), டி. ரவி ராஜா(தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம்),

எஸ்.காமராஜ்(செங்குன்றம் சுற்றுவட்டார டிப்பர் லாரி நல சங்கம்), எஸ்.ராஜேஷ்(மதராஸ் லாரி உரிமையாளர்கள் சங்கம்), வி.ஆர்.செல்வகுமார்(தமிழ்நாடு கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம்), பி.எஸ்.எஸ்.சுந்தர்ராஜன்(ராணிப்பேட்டை டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம்), ஏகாம்பரம்(தமிழ்நாடு எம்.சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கம்) ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 50 சதவீதம் கட்டுமான தொழில் நடைபெறுகின்றன.

கடந்த காலங்களில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகளை அரசே நடத்தியது. இதனால் அரசுக்கு நேரடி வருமானம் கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒட்டுமொத்தமாக தனியாரிடம் வழங்கப்பட்டதால் ஆண்டுக்கு வெறும் 150 கோடி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. எனவே அரசு ஏற்று நடத்தினால் சுமார் ரூ5000 கோடிகள் வரை ஆண்டுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள போலியான எம்.சாண்ட் குவாரிகளை கண்டறிந்து மூடவேண்டும். அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 27ம் தேதி மிகப்பெரிய அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அடுத்த மாதம் 27ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுத்துள்ளோம்.

Related Stories: