திருப்பூர் மாநகருக்குள் தடை விதிக்கப்பட்ட நேரத்திலும் லாரிகள் சென்று வர எஸ்ஐ மூலம் போக்குவரத்து உதவி கமிஷனருக்கு மாதம்தோறும் லஞ்சம்: லாரி அலுவலக மேலாளர் பேசும் வீடியோ வைரல்

திருப்பூர்: திருப்பூர் மாநகருக்குள் தடை விதிக்கப்பட்ட நேரத்திலும் லாரிகள் சென்று வர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனருக்கு எஸ்ஐ மூலம் மாதம்தோறும் லஞ்சம் கொடுப்பதாக லாரி அலுவலக மேலாளர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பூரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கனரக வாகனங்கள் மாநகரப்பகுதிக்குள் வருவதாகவும், போலீசார் பணம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கனரக வாகனங்கள் மாநகர பகுதிக்குள் நுழைந்தன.

அந்த வாகனத்தின் மீது வழக்குப்பதிய போக்குவரத்து எஸ்ஐ ஒருவர் சென்றார். அப்போது அங்கு சம்பந்தப்பட்ட லாரி அலுவலக மேலாளர் எஸ்ஐயிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  அப்போது அவர், ‘‘தடை செய்யப்பட்ட நேரத்திலும் மாநகருக்குள் லாரிகள் சென்று வர போக்குவரத்து எஸ்ஐ செந்தில்குமார் மூலம் போக்குவரத்து உதவி கமிஷனர் கொடிச்செல்வனுக்கு மாதம்தோறும் லஞ்சம் கொடுக்கிறேன். ஆனால் ஏன் மீண்டும் நடவடிக்கை எடுக்கிறீர்கள்?’’ என கூறியுள்ளார். அதற்கு அந்த எஸ்ஐ முன்பே கூறியிருந்தால் அபராதம் விதித்திருக்க மாட்டோமே என சொல்கிறார். இவர்கள் பேசிக்கொண்ட இந்த உரையாடல்கள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைளத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: