கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீடிப்பது குறித்து டிசம்பர் 13- ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீடிப்பது குறித்து டிசம்பர் 13- ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி 15 நாடுகளில் இந்த வைரஸ் பரவி விட்டது. இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் 32 பெருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, குறிப்பாக ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் பல்வேறு தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், வரும் 13 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: