வேப்பனஹள்ளி அருகே கழுத்தளவு தண்ணீரில் ஆற்றை கடக்கும் மக்கள்-தினசரி ஆபத்து பயணம்

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி அருகே கழுத்தளவு தண்ணீரில், ஆபத்தான முறையில் ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் பஞ்சாயத்து நந்தகுண்டப்பள்ளி கிராமத்தில், சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவோ, கூலி வேலைக்கு செல்லவோ வேண்டும் என்றால் கிராமத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கதிரிப்பள்ளி கிராமத்திற்கு செல்ல வேண்டும். அந்த கிராமத்திற்கு செல்ல சுமார் 12 கி.மீ சுற்றி செல்ல வேண்டும் என்பதால், மார்கண்டேயன் நதியின் கிளை நதியில் தற்காலிக சாலை அமைத்து, கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. கதிரிப்பள்ளி கிராமத்திற்கு செல்ல 12 கி.மீ., தொலைவு சுற்றி செல்ல வேண்டும் என்பதால், அதனை தவிர்ப்பதற்காக கிராம மக்கள் கழுத்தளவு தண்ணீர் செல்லும் ஆற்றில் ஆபத்தான முறையில் கயிறு கட்டி ஆபத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு, அரிசி மூட்டைகளை தலைமேல் வைத்துக் கொண்டு, ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாகவே இந்த ஆற்றில் தண்ணீர் செல்வதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே, ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனேவ, இந்த பகுதியில் சிறிய தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: