சிவகங்கை மாவட்டத்தில் 12 லட்சம் பனை விதைகள் நடும் விழா-அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டத்தில் மெகா பனை விதை நடும் திட்டத்தில் 12 லட்சம் பனை விதைகள் நடும் விழாவின் துவக்க நிகழ்ச்சி திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பு ஊராட்சியில் நேற்று நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பனை விதைகளை விதைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பனை மரங்கள் அதிகளவு வளர்த்து நீர்நிலை ஆதாரங்களை பாதுகாத்திடும் வகையிலும், பழமை வாய்ந்த சிறப்புக்களின் ஒன்றான பனை மரங்கள் வருங்காலத்தில் இளைஞர் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.

அந்தவகையில் தற்போது மாபெரும் பனை விதை நடும் திட்டத்தில் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்களில் பனை விதைகளை விதைத்து பாதுகாக்க வேண்டும். அனைவரும் ஒன்று கூடி செயல்பட்டு பனைமரம் வளர்ப்பதில் விரைவில் முதன்மை மாவட்டங்களில் ஒன்றாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்கி பசுமை புரட்சி செய்திட வேண்டும். மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 6 மணிநேரத்திற்குள் 1585 இடங்களில் 12 லட்சத்து 2150 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: