திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய அண்ணாமலையார் மலையில் பரிகார பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைந்ததையடுத்து மகா தீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலையில் பரிகார பூஜை நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் மாதம் 10ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. தீபத்திருவிழாவின் முக்கிய விழா நவம்பர் 19ம்தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசித்து வந்தது. இதையடுத்து மகாதீப கொப்பரை கடந்த மாதம் 30ம்தேதி மலை உச்சியிலிருந்து கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக நினைத்து வழிபடுவதால், தீபத்தின்போது பக்தர்கள் மலை ஏறியதற்கு பரிகார பூஜை தீபத்திருவிழா முடிவடைந்த பின்னர் நடத்தப்படுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டு தீபத்திருவிழா நிறைவடைந்ததையடுத்து நேற்று அண்ணாமலையார் கோயிலில் பிராயசித்த பரிகார பூஜை நடைபெற்றது. பூஜையையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடந்தது. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் புனித நீர் கலசத்தை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுவாமி பாதத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமி திருப்பாதத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

Related Stories: