7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என்று நம்புகிறோம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

சென்னை: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதியரசர் மகாதேவன் மற்றும் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் ஜெயசந்திரன், சித்திரஞ்சன் மோகன்தாஸ் உள்ளிட்டோரும்  பங்கேற்றனர். இவ்விழாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அப்போது அமைச்சர் ரகுபதி பேசியதாவது: மனித உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்காக முதன் முதலில் ஓடோடி சென்று முதலமைச்சர் உதவி வருகிறார். மனித உரிமைகள் பாடத்தை சட்டப்படிப்பில் ஒரு பாடமாக சேர்ப்பதற்கு முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற முத்தமிழறிஞரின் கனவை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்படும். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.

Related Stories: