ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு பகுதிகளில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழப்புக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

கீழ்பென்னாத்தூர் : எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்பட 13பேர் உயிரிழப்புக்கு கீழ்பென்னாத்தூர், ஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய விமானப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 நபர்களின் ஆத்மா சாந்தி பெறும் வகையில், `கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தும் தொடர்ந்து மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில் சுபேதார் மேஜர் ஜெயக்குமார், முன்னாள் ராணுவ வீரர் தமிழரசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணி உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.ஆரணி:  நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவம்,  விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர்  நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆரணி அடுத்த பையூர் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பள்ளி தலைமையாசிரியர் லதா தலைமையில் மாணவ, மாணவிகள் உயிரிழந்தவர்களின் மறைவிற்கு 13 மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

சேத்துப்பட்டு:  சேத்துப்பட்டு வந்தவாசி சாலை காமராஜர் சிலை அருகே பாஜ கட்சி மற்றும் இந்து முன்னணி ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்கம்  சார்பில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அகல்விளக்கு ஏற்றி சிரத்தாஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பாஜ கட்சி மாவட்டபொது செயலாளர் பாஸ்கரன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பூபாலன், நகர தலைவர் ராஜா, நகர செயலாளர் பாலாஜி, அசோகன், கோவிந்தன், தாமோதரன், தியாகராஜன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி சிரத்தாஞ்சலி செலுத்தினர்.

Related Stories: