அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார்: முதல்வர் இரங்கல்

விருத்தாசலம்:  தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனின் மனைவி பவானி (55). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அமைச்சர் சி.வெ.கணேசன் தனது குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் உள்ள தில்லை நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது மனைவி பவானி மாரடைப்பால் காலமானார். அவரது இல்லத்தில் பவானி அம்மாள் உடலுக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன், மஸ்தான், கயல்விழி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா இளவரசன், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், சபா ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, கலெக்டர் பாலசுப்ரமணியம், எஸ்பி சக்திகணேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா பெருந்தொற்றால் அமைச்சர் சி.வெ.கணேசனின் மூத்த மகள் கவிதா ஓராண்டுக்கு முன் இறந்தார். தற்போது அவரது மனைவி பவானி இறந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், அமைச்சர் சி.வெ.கணேசன் துணைவியார் பவானி அம்மாள் திடீரென்று மறைவெய்திய அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். தனது ஒவ்வொரு துளி முன்னேற்றத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த வாழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் அமைச்சர் கணேசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories: