சாணார்பட்டி பண்ணைப்பட்டியில் பள்ளத்தில் கிடக்கும் பள்ளி கட்டிடம்-மழை பெய்தாலே குளமாகும் அவலம்: புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை

கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே பண்ணைப்பட்டி அரசு பள்ளி கட்டிடம் பள்ளத்தில் கிடப்பதால் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி  ஊராட்சிக்குட்பட்டது பண்ணைப்பட்டி கிராமம். இவ்வூரில் சுற்றுவட்டார பகுதி  மாணவர்கள் கல்வி கற்பதற்காக கடந்த 1982ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி  கட்டப்பட்டது. இங்கு தற்போது 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து  வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் பள்ளத்தில் அமைந்துள்ளதால் மழை பெய்யும்  போதெல்லாம் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது.

பள்ளி கட்டிடத்தின் மேல்பகுதி சிதிலம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது.  இதனால் மழைநீர் ஒழுகி வகுப்பு அறைகளில் தேங்கி விடுவதால் மாணவ, மாணவிகள்  ஈரத்தரையில் அமர்ந்து கல்வி கற்கும் அவலநிலை உள்ளது. மேலும் பள்ளி  சுற்றிலும் செடிகள் புதர்மண்டி கிடப்பதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் சர்வ  சாதாரணமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம்  கட்டி ெகாடுக்குமாறு பலமுறை மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் நடக்கும்  முன்பும் மாணவ, மாணவிகள் நலன் கருதியும் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம்  கட்டித்தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories:

More