ஒடுகத்தூர் பகுதிகளில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்-கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஒடுகத்தூர் :  ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர், பின்னத்துரை, முத்துக்குமரன் மலை, வி.கே.தாமோதர நகர், குறவன்குட்டை, ஏரியூர் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒடுகத்தூர் பகுதிக்கு வந்துதான், மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இதற்காக, இப்பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து உள்ளது. ஆனால், அவ்வழித்தடங்களில் ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி மாணவர்களும் சாலையில் விழுந்து படுகாயமடைவதோடு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.வேலூர் அருகே கடந்த 4ம் தேதி நடந்த சம்பவத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவன் பலியானதால் போலீசார் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆனால், மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் வழக்கம் மட்டும் மாறாமல் இருக்கிறது. இந்நிலையில், கீழ்கொத்தூர் வழியாக ஒடுகத்தூர், வேலூர் செல்லும் அரசு பஸ்சில் மாணவர்கள், பெண்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே, மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அதேபோல், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: