தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி பெண்ணிடம் ₹5.60 கோடி மோசடி-ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி : தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி, பெண்ணிடம் ₹5 கோடியே 60 லட்சம் மோசடி செய்ததாக, ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பழைய மத்திகிரியை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மனைவி ஜெயலட்சுமி (46). இவருடன் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பழகி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ரவிச்சந்திரன், தனது தொழிலில் பங்குதாரராக சேர்ந்து கொண்டால், வரும் லாபத்தில் பங்கு தருவதாக ஜெயலட்சுமியிடம் கூறினார். அதை நம்பிய ஜெயலட்சுமி ₹50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ரவிச்சந்திரன் அவருக்கு லாபத்தில் பங்கு அளித்தார். இதையடுத்து ரவிச்சந்திரன், தெரிந்தவர்களிடம் கூறி பணம் பெற்று கொடுத்தால் லாபத்தில் பங்கு தருகிறேன் என கூறியுள்ளார்.

இதனால், ஜெயலட்சுமி தனக்கு தெரிந்தவர்களிடம் வங்கி பண பரிவர்த்தனை மூலமாக ₹5 கோடியே 60 லட்சம் பணம் பெற்று, ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட ரவிச்சந்திரன், அதன் பிறகு லாபத்தில் சரிவர பணம் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், ரவிச்சந்திரன் குடும்பத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி ரவிச்சந்திரன், அவரது மனைவி லதா, மகன் ராகுல் மற்றும் மருமகன் சுபாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகிறார்.

Related Stories: