ஒமிக்ரான் பரவல்: விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரம்; கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

சென்னை: ஒமிக்ரான் பரவிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7,466 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர் என்று மருத்துவத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் வந்த பயணிகளில் இதுவரை 9 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை தொற்று மேலும் பல நாடுகளுக்கும் பரவியுள்ளதால் அந்த நாடுகளின் பயணிகளையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. துரித பரிசோதனை கட்டணம் ரூ.3,400ல் இருந்து ரூ.2,900ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.700ஆக இருந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் ரூ.600ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ்களை கட்டுப்படுத்தும் விதமாக நமது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ராபிட் டெஸ்ட் கட்டணமாக ரூ.3,400 வசூலிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ரூ.500 குறைத்து ரூ.2,900ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் டெஸ்ட் ரூ.700ல் இருந்து ரூ.600 அளவிற்கு குறைந்துள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. டிசம்பர் 1 முதல் இன்று வரை 7,473 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் சீடன் நாடுகளில் இருந்து வந்த அந்த பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகம் பாதிப்பில்லாத நாடுகளில் இருந்து வந்த 26,527 பயணிகளில் 2% பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் இருந்து வந்த 2 பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கும் ஒமிக்ரான் வகை வைரஸ் இல்லை  என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  ராபிட் டெஸ்ட் மூலம் 45 நிமிடங்களில் ரிசல்ட் தெரிகிறது. அவர்களுக்கு பாசிட்டிவ் வரும் பட்சத்தில் ஐசிஎம்ஆர் அதிகாரிகளுடன் சேர்ந்து பெங்களூரு அல்லது கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

Related Stories: