சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஏழுமலையான் கோயிலில் திருப்பாவை பாசுரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதத்தில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் 1ம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக  ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடியபடி சுவாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாதம் வரும் 16ம்தேதி மதியம் 12.26 மணிக்கு தொடங்குவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 17ம்தேதி முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சுவாமியை துயில் எழுப்பப்படவுள்ளது.

மார்கழி மாதம் நிறைவுபெறும் வரை (ஜனவரி 14ம் தேதி வரை) திருப்பாவை சேவை நடைபெறவுள்ளது. மீண்டும் வழக்கம்போல் ஜனவரி 15ம் தேதி முதல் சுப்ரபாத சேவையுடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி துயில் எழுப்பப்பட உள்ளது. மேலும் தினந்தோறும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கு ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: