சிவகாசியில் கனமழைக்கு 10 வீடுகள் சேதம்-பழமையான மரம் முறிந்து விழுந்தது

சிவகாசி : சிவகாசியில் கனமழைக்கு 10 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. மேலும், பழமையான வாகை மரம் முறிந்து விழுந்தது. சிவகாசி பகுதியில்  தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது.  நேற்று முன்தினம் சுமார் 3  மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.  இதில், வெள்ளையாபுரம், விஸ்வநத்தம்,  மாரனேரி, அனுப்பன்குளம்,  சாமிநத்தம்  உட்பட பல்வேறு கிராமங்களில் 10  வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. சேதம் அடைந்த பகுதிகளை தாசில்தார் ராஜகுமார்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் மற்றும் அதிகாரிகள்  நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா  ரூ.5 ஆயிரம், பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500  நிவாரண நிதியை தாசில்தார் ராஜகுமார் வழங்கினார்.

முறிந்து விழுந்த பழமையான மரம்

சிவகாசியில்  கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,  சிவகாசி காமராஜர் சிலை அருகே நகருக்குள் செல்லும் சாலையில் நேற்று அதிகாலை 3  மணி அளவில் திடீரென பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து விழுந்தது.  இதனால்,  அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சிவகாசி தீயணைப்புத்துறை  நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம்  போராடி சாலையில் விழுந்த மரத்தை அகற்றினர். இதனால், அந்த பகுதியில் 3 மணி  நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.  சாலையில் முறிந்து விழும்  நிலையில் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறையினர்  அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: