கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் வீட்டுமனைகளை சூழ்ந்த மழைநீர்-அவதியில் குடியிருப்பு வாசிகள்

பரமக்குடி :  பரமக்குடி அருகே எமனேஸ்வரம் கண்மாய் பகுதியையொட்டி புதுநகர் குடியிருப்பு பகுதியில்,  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  வைகை ஆற்று பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து, வைகையாற்றின் இடது மற்றும் வலது புறத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் திறக்கப்பட்டு பாசன  கண்மாய்களில் நிரப்பப்பட்டு வருகிறது.

எமனேஸ்வரம் கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடந்த ஆறு நாட்களாக  தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் உள்ள  வீட்டிற்குள் தண்ணீர் வருவதாக புதுநகர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் எமனேஸ்வரம் கண்மாய் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில்  புதுநகரில்  பெரும்பாலான  வீடுகளுக்குள் தண்ணீர் புகும் சூழ்நிலை உள்ளது.

எமனேஸ்வரம் கண்மாய் பகுதியில், விதிமுறைகளை மீறி நீர்பிடிப்பு பகுதிகளை வீட்டுமனைகளாக்கி  விற்பனை செய்ததால், இன்று 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீரில் தத்தளிக்கின்றனர். சிலர் வீடுகளை காலி செய்து நகர்ப்புறங்களுக்கு சென்று விட்டனர். இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், ‘‘வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வைகை ஆற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் அனைத்து பாசன கால்வாய்க்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் புதுநகர்  நீர்நிலை பகுதிகளில் வீட்டுமனைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பொதுமக்கள் வீடுகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: