பாம்பனில் விழும் நிலையிலான டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களை மாற்ற வேண்டும்-மக்கள் வேண்டுகோள்

ராமேஸ்வரம் :  பாம்பனில் சேதமடைந்து உடை ந்து விழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பங்களை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பாம்பன் கடற்கரை துறைமுக அலுவலகம் அருகிலுள்ள புதுத்தெருவில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டிருக்கும் சிமென்ட் கான்கிரீட் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமென்ட் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து கீழிருந்து மேல்வரை உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதுடன் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும் டிரான்ஸ்பார்மரில் இருந்து கம்பங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் சீராக இல்லாமல் தாழ்வாக தொங்கிய நிலையில் செல்கிறது. இதனால் காற்றடிக்கும் போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் தீப்பொறி பறந்து மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பகுதியில் அதிகளவில் மீனவர்களின் குடிசை வீடுகள் இருப்பதால் மின்கம்பிகள் உரசும்போது தீப்பொறி பறந்து தீவிபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

டிரான்ஸ்பார்மர் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இப்பகுதி மக்கள் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி தொங்கி செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: