நெல்லையில் கூடுதல் கற்கள் வெட்டி எடுப்பு 3 கல்குவாரிகளுக்கு ரூ.25 கோடி அபராதம்

நெல்லை: நெல்லை மாவட்டம், ராதாபுரம், பழவூர், அம்பலவாணபுரம், வட்டார காத்தான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருக்கு ராதாபுரம் அருகே இருக்கன்துறை கிராமத்தில் 2.41.0 ஹெக்டேர் பட்டா நிலத்தில் சாதாரண கற்கள் வெட்டி எடுப்பதற்கு, 2018ம் ஆண்டு பிப்.28ம் தேதி  முதல் 2023ம் ஆண்டு பிப்.27ம் தேதி வரை குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குத்தகை உரிம காலத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவிற்கு கனிமம் வெட்டி எடுத்ததாக புகார்கள் வந்தது. இதையடுத்து அப்போதைய சேரன்மகாதேவி சப்.கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது குத்தகை உரிம காலத்தில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 464 கனமீட்டர் அளவிற்கு கனிமம் வெட்டி வெளியே சென்றது தெரியவந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவான 4 லட்சத்து 82 ஆயிரத்து 640 கன மீட்டர் என்ற அளவை விட கூடுதலாகும்.

இதையடுத்து கல்குவாரி குத்தகைதாரர் இசக்கியப்பனுக்கு ரூ.20  கோடியே 11 லட்சத்து 4 ஆயிரத்து 352 அபராதம் விதித்து, சேரன்மகாதேவி  சப்-கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட குத்தகையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு, அவரது விளக்கத்தை இன்று காலை 10 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தவிர விவி மினரல்ஸ் நிறுவன கல் குவாரிக்கு ரூ.5 கோடியே 49 லட்சமும், எடத்துவா நிறுவன குவாரிக்கு ரூ.12 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக 3 கல் குவாரிகளுக்கும் மொத்தம் ரூ.25.72  கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: