சென்னை மணலியில் மழை, வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மணலியில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். மேலும் மருத்துவ முகாம்களுக்கு சென்று அங்கும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தலைமை செயலகத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு உடனடியாக சென்னை மணலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார்.

மணலி பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அங்குள்ள குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை நேரில் பார்வையிடுகிறார். மீட்பு பணிகளை துரிதமாக நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். குடியிருப்பு பகுதிகளுக்கு எந்த பகுதியில் இருந்து மழை, வெள்ளமானது செல்கிறது. அந்த பகுதியில் இருக்கக்கூடிய கால்வாய்கள், ஏரிகள் முறையாக தூர்வாரப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழை, வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமங்கள் குறித்து அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ச்சியாக பொதுமக்கள் பலர் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

குடியிருப்பு பகுதிகளில் மழை, வெள்ளம் சூழ்ந்திருந்தால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும், அடுத்தடுத்து மழைகள் வரும் போது அந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கின்றனர். 

Related Stories:

More