வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதில் 76 சதவீதம் ஒரு வார காலத்தில் எட்டிவிடுவோம்-கட்டுப்பாட்டு மையம் திறந்து கலெக்டர் தகவல்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி 76 சதவீதம் எட்டப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து கடந்த 30ம் தேதி முதல் தற்போது வரை வேலூர் மாவட்டத்துக்கு 71 பேர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் 42 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு வரும் 8ம் தேதி மீண்டும் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்படும். அதன் முடிவுகளை பொறுத்து அவர்கள் விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

71 பேரில் 12 பேர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 பேரை அடையாளம் காணும் பணி தொடர்ந்து வருகிறது.கொரோனா பாதிப்பை பொறுத்தவரை மாவட்டத்தில் இன்று 2600 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 9 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 நாட்களுக்கு முன்பு 31 பேர் என வந்தது.

இது சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் தங்கியுள்ள விடுதிகளின் முகவரி மற்றும் மருத்துவமனை முகவரியை தருவதால் வருகிறது. இதுதொடர்பாக சிஎம்சி மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான விவரங்களை அவர்களின் ஆதார் முகவரியுடன் உடனுக்குடன் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் தங்கும் விடுதிகளில் 2 கொரோனா பரிசோதனை செய்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும்படியும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதுடன், அவர்களின் ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு முகவரியை உறுதி செய்ய வேண்டும் என்றும் லாட்ஜ்கள், விடுதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறையினரும் கண்காணிக்க பணிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு லாட்ஜ் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். சென்னை-பெங்களூரு காரிடாரில் வேலூர் அமைந்துள்ளதால் நெடுஞ்சாலையோர ஓட்டல்கள், உணவகங்களின் உரிமையாளர்களுக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஏற்கனவே உள்ளது போல ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் ஏர்கண்டிஷனர் இயக்கத்தை நிறுத்தி வைப்பது, சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட உள்ளது. ஒமிக்ரான் நோய் தடுப்பு சிகிச்சைக்காக 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் ஏற்கனவே உள்ள கொரோனா சிகிச்சைக்கான வார்டுகள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் பின்தங்கியிருந்தது. இதையடுத்து டாக்டர்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையினர், மாநகராட்சி, ஊடகத்துறையினர் ஒத்துழைப்பினாலும், அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வாலும் இதுவரை முதல் டோஸ் 73 சதவீதம் பேரும், 2வது டோஸை 40 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். மாநில விகிதாச்சாரம் 80 சதவீதமாகும்.அடுத்த வாரம் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமுக்கு பிறகு தடுப்பூசி செலுத்துவதில் 76 சதவீதத்தை வேலூர் மாவட்டம் எட்டும். தடுப்பூசி இருப்பை பொறுத்தவரை கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டும் சேர்த்து 2.25 லட்சம் டோஸ் இருப்பு உள்ளது.

வேலூர் ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனையை ஒட்டி செல்லும் சாலைப்பகுதிகளில் கிருமி நாசினி முன்பு போல தெளிக்கப்படும். அதோடு தங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், அவர்களுடன் தங்கியிருப்பவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கொரோனா தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாநகர்நல அலுவலர் மணிவண்ணன், நகர்புற, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More