அரூர் அருகே தொடரும் ஆபத்து பயணம் கயிறு கட்டி வாணியாற்றை கடந்து செல்லும் மக்கள்-உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

அரூர் : அரூர் அருகே, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் வாணியாற்றை கடந்து சென்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம் செல்லம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழானூர் மற்றும் சங்கிலிவாடி, கொத்தனாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கீழானூரை கடந்து, எச்.ஈச்சம்பாடி வழியாக கே.வேட்ரப்பட்டிக்கு சென்று அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்களும் பல்வேறு தேவைக்காக எச்.ஈச்சம்பாடி சென்று வருகின்றனர். மேலும், எச்.ஈச்சம்பாடி, கீழ் மொரப்பூர், கே.வேட்ரப்பட்டி, வேப்பநத்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கீழானூர் வாணியாற்றை கடந்து, தீர்த்தமலைக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கீழானூர் பகுதியில் வாணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சுமார் 15 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் ஆற்றினுள் கயிறு கட்டி, அதனை பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.இதனால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, வாணியாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: