புதுச்சேரியில் 250 நாட்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாலை அணிவித்து மேளம், தாளம் முழங்க மாணவர்கள் வரவேற்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 250 நாட்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 9,10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாநில அரசு, புதுச்சேரியில் டிசம்பர் 6ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி இன்று புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

250 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்க கல்வித்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளி நுழைவு வாயிலில் வாழைமர தோரணங்கள் கட்டப்பட்டு, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து, மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க  ஆசிரியர்கள் வரவேற்றனர். வகுப்புகளில் மாணவர்கள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளிக்குள் நுழையும் மாணவர்களுக்கு முகக்கவசம் கொடுக்கப்படுகிறது. வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் முழு நேர வகுப்புகள் தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More