கிராமந்தோறும் சென்று 10 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்: புதிய மாவட்ட செயலாளர்களுக்கு ராமதாஸ் உத்தரவு

சென்னை: கிராமங்கள்தோறும் சென்று தலா 10 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று புதிய மாவட்ட செயலாளர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. புதிய மாவட்ட செயலாளர்களாக பொறுப்பேற்றுள்ள நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய  முதன்மைப் பணி உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு அல்லது மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனைத்து கிராமங்களுக்கும் சென்று நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திப்பது தான்.

அனைத்து மாவட்ட செயலாளர்களும் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும். அதன் அடையாளமாக ஒவ்வொரு கிராமத்திலும்  தலா 10 பேரிடம் மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து பெற வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும். நமது இலக்குகளையும், லட்சியங்களையும் அடைவதில் ஒன்றிய செயலாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. அதனால், மாவட்ட செயலாளர்கள் நிலையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. சிறப்பாக செயல்படும் ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பில் தொடர்வார்கள். வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. இந்த இலக்கை அடைய நாம் அனைவரும்  கடுமையாக உழைக்க வேண்டும்.

Related Stories: