எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு: அ.ம.மு.க.வினர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாக அதிமுக போலீசில் புகார்

சென்னை: எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியானது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை அதிமுக, அமமுக தொண்டர்கள்  மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அந்தவகையில், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் இன்று காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். காலை 10.15 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் அவர்களது காரில் புறப்பட்டு செல்லும் போது காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் காவல் நிலையம் சந்திப்பு அருகே இருவரது வாகனத்தையும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைப்பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனே அங்கு வந்து அமமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடமாக இருவரது காரையும் வழிமறித்து ‘டிடிவி.தினகரன் வாழ்க.. சசிகலா வாழ்க’ என்று கோஷமிட்டனர். பின்னர், காவல்துறையினர் அங்கே வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து காரை அனுப்பி வைத்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கார் மீது அமமுகவினர் செருப்பு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியானது. டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வினர் மீது அ.ம.மு.க.வினர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கட்டை, போன்ற ஆயுதங்களை அமமுகவினர் எடுத்து வந்ததாகவும் புகாரில் குறிப்பிபாப்பட்டுள்ளது. எடப்பாடி, பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: