இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கரு கலைப்பு: இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு

மார்த்தாண்டம்: குமரியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கரு கலைப்பு செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்த 32 வயது இளம்பெண், குழித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது : எனக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகி உள்ளது. 9 வயதில் ஒரு மகள் உள்ளாள். அவள், விடுதியில் தங்கி படிக்கிறாள். நான் நர்சாக பணியாற்றி வருகிறேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, எனது உடமைகளை பறித்து அஜிஸ் என்பவர் ஏமாற்றி விட்டார்.

இது தொடர்பாக நான் புகார் அளிப்பதற்காக பளுகல் காவல் நிலையத்துக்கு சென்றேன். அப்போது அங்கு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரலிங்கம் என்னிடம் விசாரித்தார். பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினார். இந்த பிரச்சினை காரணமாக ஏற்கனவே குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு, வாடகை வீட்டுக்காக அலைந்து கொண்டிருந்த நேரத்தில், எஸ்.ஐ. சுந்தரலிங்கம் போனில் தொடர்பு கொண்டு அவரது நண்பர் மூலம், இளஞ்சிறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தந்தார். பின்னர் வழக்கு தொடர்பான விசாரணை என்று கூறி வீட்டுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், சம்பவத்தன்று என்னை பலாத்காரம் செய்தார்.

இதில் நான் கர்ப்பம் அடைந்தேன்.  இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கத்திடம் கூறிய போது கருவை கலைத்து விடுமாறு மிரட்டினார். அவரது தூண்டுதலின் பேரில் பலரும் என்னை மிரட்டினர். டி.எஸ்.பி. அலுவலகத்திலும், பளுகல் மற்றும் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. தனியார் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருவை கலைத்தனர். கரு கலைந்ததால் வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டு, ரத்தம் அதிகமாக வெளியேறியது. உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

எனது வழக்கில் உதவுவதாக கூறி என்னை பலாத்காரம் செய்த எஸ்.ஐ. மற்றும் அவருக்கு துணை நின்று எனது கருவை சட்ட விரோதமாக கலைத்ததுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு இந்த உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டும், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ. சுந்தரலிங்கம், ஏட்டு கணேஷ்குமார், தச்சன்விளாகத்தை சேர்ந்த விஜின் (34), அபிஷேக் (25), மூவோட்டுக்கோணம் உமேஷ் (45), தனியார் கிளினிக் டாக்டர் கார்மல் ராணி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜ், அனில்குமார் ஆகிய 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 323, 354 (ஏ),376, 313 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் எஸ்.ஐ. ஆக இருந்த சுந்தரலிங்கம், தற்போது பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக தேனி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: