ஸ்ரீரங்கம் கோயிலில் பகல்பத்து உற்சவம் துவங்கியது கவரிமான் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பகல்பத்து உற்சவம் நேற்று துவங்கியது. கவரிமான் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். அதில் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதம் நடைபெறுவதால் தனித்துவம் மிக்கது. இந்நிலையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கியது.

இதனை தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கவரிமான் தொப்பாரை கொண்டை, தங்க கிளியுடன் ரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசுமாலை புஜகீர்த்தி , பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Related Stories:

More