12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்; எதிர்கட்சி - ஆளுங்கட்சி எம்பிக்கள் போராட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

புதுடெல்லி: 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் எதிர்கட்சி எம்பிக்களின் போராட்டத்தை கண்டித்து ஆளுங்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (நவ. 29) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. கூட்டத் தொடரின் முதல் நாள் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை வேளாண் துறை அமைச்சர் வாபஸ் பெற்றார்.

அடுத்த நாள் முதல் மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அவையில் கோரிக்கை எழுப்பி வந்தன. நாடாளுமன்றத்தின் வெளியேயும் எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. நேற்றைய கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா - 2019 குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், குரல் வாக்கெடுப்பின் மூலம் அணைகள் பாதுகாப்பு மசோதா - 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு மக்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதால், அணைகள் பாதுகாப்பு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மக்களவை கூடியது கொரோனா தொற்றுநோயை ஒன்றிய அரசு கையாண்டதில் தோல்வியடைந்ததாக கூறி எதிர்கட்சிகள் கோஷமிட்டன. சமீபத்தில் திரிபுராவில் நடந்த மாநகராட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ்,

திமுக, ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஐ (எம்), என்சிபி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 267வது விதியின் கீழ் இடைநீக்க நோட்டீஸ் அளித்தன. தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள், அவையை புறக்கணித்து  வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் 12 எம்பிக்கள் மீதான  சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர். கூட்டத்தொடர் தொடங்கிய அடுத்த நாள் முதல் எதிர்கட்சிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இதனை பொறுத்துக் கொள்ளாத பாஜக எம்பிக்கள், எதிர்க்கட்சி எம்பிக்களின் புறக்கணிப்பு, அமளி, போராட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சி உறுப்பினர் ஒருபுறமும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றொரு புறமும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மக்களவையில் கொரோனா வைரஸ் குறித்த விவாதத்திற்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தினோம்.

ஆக்சிஜன் டேங்கர்கள் டெல்லியின் தெருக்களில் சுற்றித் திரிந்தன’ என்றார். தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு, தடுப்பூசி திட்டங்கள் குறித்து அமைச்சர் பேசினார். எதிர்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில் தொடர்ந்து கூட்டத் தொடர் நடைபெற்றது.

மன்னிப்பு முழுமை அடையாது!

* காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வேளாண் விரோத சட்டம் இயற்றியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். அதற்கு நாடாளுமன்றத்தில் என்ன பரிகாரம் சொல்லப் போகிறார்? லக்கிம்பூர் வழக்கில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரை எப்போது பதவி நீக்கம் செய்வார்? உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும்? அவர்கள் மீதான பொய் வழக்குகள் எப்போது வாபஸ் பெறப்படும்? குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டம் எப்போது இயற்றப்படும்? இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அவரது மன்னிப்பு முழுமை அடையாது!’ என்று கூறியுள்ளார்.

* மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தம் சட்டத்தை  அமல்படுத்தக் கோரி, பிரதமர் மோடியை அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் குழு இன்று சந்திக்கிறது. இதுகுறித்து கட்சியின் துணைத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ‘நாங்கள் இன்று பிரதமரை சந்தித்து மேற்குவங்க வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பேசவுள்ளோம். மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுப்போம்’ என்றார்.

Related Stories: