சந்தவாசல் கிராமத்தில் ஆபத்தான பள்ளி கட்டிடத்தை உடனே மூட வேண்டும்-டி.இ.ஓ. உத்தரவு

போளூர் : போளூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதிஉதவி தொடக்க பள்ளியை தற்காலிகமாக மூடி வைக்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  போளூர் ஒன்றியம் சந்தவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட காங்கிரனந்தல் கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கபள்ளி செயல்பட்டு வருகிறது. 1950-ம் ஆண்டு ஒரு ஓட்டு வீட்டில் தொடங்கப்பட்ட இந்த பள்ளி இன்னமும் அதே இடத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் செயல்பட்டு வருகிறது. சுமார் 400 சதுர அடி கொண்ட ஒரு வீட்டின் அளவு கூட இல்லாத இந்த இடத்தில் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நிறைய மாணவர்கள் படித்துள்ளனர்.

  இப்போது 35 மாணவ மாணவிகளும் 2 ஆசிரியைகளும் உள்ளனர். தமிழகத்தில் எல்லா பள்ளிகளும் சிமென்ட் கட்டிடங்களாக மாறி பல ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இந்த பள்ளி இன்னமும் பழைய நாட்டு ஓடு வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. 2 டியூப் லைட் மட்டுமே எரிகிறது. அப்போதும் இருட்டாகவே உள்ளது. பள்ளிக்கு வெளியே உள்ள சாலை கடந்த 70 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் பள்ளி கட்டிடம் சுரங்க பாதை போன்று தாழ்வாக உள்ளது. மழை பெய்தால் ஒட்டு மொத்த தண்ணீரும் பள்ளிக்குள் நுழைந்து குளம் போல் தேங்கி வருகிறது. அப்போது பள்ளிக்கு யார் அனுமதியும் பெறாமல் விடுமுறை விடபட்டு விடுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பள்ளியை இதுவரை வட்டார கல்வி அலுவலரோ, மாவட்ட கல்வி அலுவலரோ நேரில் வந்து ஆய்வு செய்ய வந்ததில்லை.   

  இந்நிலையில் நேற்று போளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் பள்ளி துணை ஆய்வாளர் ஷைனிமோல், வட்டார கல்வி அலுவலர் சுந்தர் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இது போன்ற பாதுகாப்பு இல்லாத கட்டிடத்தில் ஒரு நிமிடம் கூட பள்ளி செயல்பட அனுமதிக்க முடியாது. எனவே இந்த பள்ளியை 3 நாட்களுக்கு மூடி வைக்கவும் அதற்குள் வேறு பாதுகாப்பான  இடத்திற்கு பள்ளியை இடம் மாற்றம் செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி மதியம் சத்துணவு வழங்கிய பிறகு மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளி மூடப்பட்டது.

Related Stories: