மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம்: குடியரசு தலைவர் விருது வழங்கினார்

டெல்லி: டெல்லியில் இன்று ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டார். இவ்விழாவில் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருதினை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிட தமிழ்நாடு சமூக நலம் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் சமூக நலம் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தெரிவிக்கையில்: ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி தினத்தன்று மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் தனித்துவ திறமைகளை வெளிப்படுத்திட மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதுடன் மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதுகள் (National Award for the Empowerment of Persons with Disabilities for the year 2020) தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

அதன்படி சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்த A.M.வேங்கட கிருஷ்ணன் (பார்வை திறன் குறையுடையோர் பிரிவு), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த S.ஏழுமலை (பார்வை திறன் குறையுடையோர் பிரிவு), காஞ்சிபுரம் மாவட்டம் கானாத்தூர் ரெட்டிக்குப்பம் சேர்ந்த K.தினேஷ் (அறிவுசார் குறைபாடுடையோர் பிரிவு), திருச்சிராப்பள்ளி மாவட்டம் சேர்ந்த மானக்ஷ தண்டபாணி (Maneksha Thandapani) ஆகியோருக்கும் சிறந்த சான்றாளர் / முன்னுதாரணம் (Role Model) சென்னை மாவட்டம் மந்தவெளியை சேர்ந்த K.ஜோதி (பல்வகை குறைபாடுடையோர் பிரிவு), நாமக்கல் மாவட்டம் மோகனுர் பேட்டப்பாளையம் சேர்ந்த T.பிரபாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

மேற்காணும் விருதுகளுடன் இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக (Best State in Promoting Empowerment of Persons with Disabilities) தமிழ்நாடும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக (Best District in Providing Rehabilitation Service) சேலம் மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆர்.லால்வேனா கலந்துகொண்டார்.

Related Stories:

More