ஒமிக்ரான் தடுப்பு குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கும், இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனாவா என கண்டறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் கொரோனா பரவல் காரணமாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர் ஒமிக்ரான் பரவிய நாடுகள் மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணிப்பதாக அமைச்சர் கூறினார். ஆர்டிபிசிஆர் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள விமான பயணிகளுக்கு அரசே கட்டணத்தை ஏற்கும் என்று தெரிவித்தார். ஒமிக்ரான் வகை கொரோனா என்றால் வெளிப்படையாக தெரிவிப்போம் என்றும் அதுவரை வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதிக பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க செய்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரையில் ராஜாஜி மருத்துவமனை, திருச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னையில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனை என்று 6 மருத்துவமனைகளில் இதற்கான பிரத்தேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 30 - 40 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகையை விட பலமடங்கு வேகமாக பரவக்கூடியது.

திருச்சியிலும், சென்னையிலும் ஒமிக்ரான் தொற்று வந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மையில் அவர்களுக்கு கொரோனா தொற்று மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் சோதனைக்காக மாதிரிகள் பெங்களூருவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் வரும் வரை அவர்களுக்கு ஒமிக்ரான் வந்துவிட்டதாக கருத முடியாது. விமானத்தில் இவர்களுக்கு அருகில் பயணித்தவர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மிகுந்த எச்சரிக்கையோடு தமிழக அரசு கையாண்டு வருகிறது. தேவையற்ற பீதியை உருவாக்குவதற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் எந்தவிதமான கருத்துக்களையும் பொறுப்பற்ற முறையில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கிட்டத்தட்ட 80%, இரண்டாவது டோஸ் 45% பேருக்கும் போடப்பட்டுள்ளது. இன்னும் 80 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான தவணையில் உள்ளனர். தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றமடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: