வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை; வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ102 அதிகரிப்பு: சென்னையில் ரூ2235.50 ஆக நிர்ணயம்

சேலம், டிச.2: நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் நடப்பு மாதம் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ102 அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல், பலகார கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ694 ஆகவும், சென்னையில் ரூ710 ஆகவும் இருந்தது. பின்னர், ஒவ்வொரு மாதமும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் (நவம்பர்) 1ம் தேதி சென்னையில் ரூ915.50 ஆக விற்கப்பட்டது.  இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (டிசம்பர்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் இரவு வெளியிட்டது.

இதன்படி, 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ102 அதிரடியாக அதிகரித்து அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ2,133.50க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ102 அதிகரித்து, ரூ2,235.50 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் வர்த்தக சிலிண்டர் கடந்த மாதம் ரூ2091.50க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ102 உயர்ந்து ரூ2,193.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பலகார கடை உரிமையாளர்கள் வர்த்தக காஸ் சிலிண்டர்களையே பயன்படுத்துகின்றனர். இதன்விலை தற்போது ரூ102 அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒரு சிலிண்டரின் விலை ரூ2200ஐ தாண்டியுள்ளது. இதனால், ஓட்டல், பலகார கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

More