பங்கு வாங்க விரும்பினால் உடனடியாக DEMAT கணக்கு தொடங்க வேண்டும்!: பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி. பொது அறிவிப்பு..!!

சென்னை: எல்.ஐ.சி. நிறுவனம் பொது பங்கீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், பாலிசிதாரர்கள் பங்கு வாங்க விரும்பினால்  DEMAT கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. சுமார் 29 கோடி பாலிசிதாரர்களை கொண்டது. 38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வளம் கொழிக்கும் எல்.ஐ.சி. நிறுவனத்தை பங்குசந்தையில் பட்டியலிட்டு அதன் வழியாக தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொதுப்பங்குகளை வெளியிடும் நோக்குடன் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசு, நடப்பு வாரத்தில் செபியிடம் வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பாலிசிதாரர்களுக்கு ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக புது அறிவிப்பு ஒன்றை எல்.ஐ.சி. நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. அதில் பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு DEMAT கணக்கு அவசியம் என்பதால் பங்கு வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள் உடனடியாக DEMAT கணக்கு தொடங்க வேண்டும் என்றும்  எல்.ஐ.சி. அறிவித்துள்ளது. ஆனால் எல்.ஐ.சி.யை பங்குசந்தையியல் பட்டியலிடுவதை ஏற்க முடியாது என்று ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

DEMAT கணக்கு தொடங்க மற்றும் பராமரிப்பு செலவுகளை பாலிசிதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விவரங்களுக்கு முகவர்களை அணுகலாம் என்றும் எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. மேலும் பாலிசிதாரர்கள் தங்களது PAN கார்ட் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் PAN கார்ட் இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற வேண்டும் என்றும் எல்.ஐ.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: