வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தால் குமரியில் மேலும் 56 வீடுகள் இடிந்து விழுந்தன: 583 பேர் தொடர்ந்து முகாம்களில் தஞ்சம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தால் மேலும் 56 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 583 பேர் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் முழுவதும் வடியாத நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இன்று காலை முதல் வெயில் காணப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.13 அடியாகும். அணைக்கு 2730 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 4204 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 73.45 அடியாகும். அணைக்கு 1062 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் அணை மூடப்பட்டுள்ளது. சிற்றார்-1ல் 16.37 அடியும், சிற்றார்-2ல் 16.47 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 42.70 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 15 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 15 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 109 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 109 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 25 அடியாகும். அணைக்கு 9.6 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 8.6 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 56 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் அகஸ்தீஸ்வரத்தில் 2, தோவாளை தாலுகா பகுதிகளில் 8, கல்குளத்தில் 24, விளவங்கோட்டில் 22 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக ஆரல்வாய்மொழியில் 15 மி.மீ மழை பெய்திருந்தது. பூதப்பாண்டி 10.8, மயிலாடி 13.4 மி.மீட்டரும் மழை காணப்பட்டது. மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தங்கியிருந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இன்றும் வீடுகளுக்கு திரும்ப இயலவில்லை. இன்று காலை நிலவரப்படி பள்ளிக்கல், மங்காடு, பார்திப்பபுரம் பகுதிகளில் உள்ள முகாம்களில் 583 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 1ம் தேதி தெற்கு கிழக்கு வங்காள விரிகுடா உள் கடல் பகுதிகளிலும், அதனுடன் சேர்ந்த மத்திய கிழக்கு வங்காள விரிகுடா உள்கடல் பகுதிகளிலும், மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், அதனுடன் சேர்ந்த வடக்கு கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், குஜராத்- மகாராஷ்டிரா கடல் பகுதியிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 2ம் தேதி மத்திய வங்களா விரிகுடா உள்கடல் பகுதியிலும், அதனுடன் சேர்ந்த தெற்கு- கிழக்கு வங்காள விரிகுடா உள்கடல் பகுதியிலும் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் சில வேளையில் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. வடக்கு கிழக்கு அரபிக்கடல், அதனுடன் சேர்ந்த மத்திய கிழக்கு அரபிக்கடல், இவை தவிர குஜராத், மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில இடங்களில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 3ம் தேதி மத்திய மேற்கு வங்களா விரிகுடா உள்கடல் பகுதியிலும், அதனுடன் சேர்ந்த வடக்கு மேற்கு வங்களா விரிகுடா உள்கடல் பகுதியிலும், ஆந்திர வடக்கு கடல் பகுதியிலும் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் தவிர குஜராத் தெற்கு கடல் பகுதிலும், மகாராஷ்டிராவில் வடக்கு கடல் பகுதியிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும்.

எனவே இந்நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கன்னியாகுமரி கடல் பகுதியிலும், அதனையொட்டி இலங்கை கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் தெற்கு அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்து தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவாகவும் வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 1ம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மகாராஷ்டிரா கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: