16 ஆண்டுகளுக்கு பிறகு களரம்பட்டி ஏரி நிரம்பிய மக்கள் பூஜை செய்து மகிழ்ச்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால், ஆண்டு சராசரி மழை அளவான 861 மிமீ காட்டிலும் அதிகமாக 1289.27மிமீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளில் நேற்று வரை 65 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மாவட்டத்தின் மேற்கே பச்சை மலை அடிவாரத்தில் களரம்பட்டி, அம்மாப்பாளையம் ஆகிய 2 கிராம பொதுமக்கள், விவசாயிகள் பயனடையக்கூடிய களரம்பட்டி பெரிய ஏரி நேற்றுமுன்தினம் இரவு 12.30 மணிக்கு தனது முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் நிரம்பி வழிய தொடங்கியது.

இதை எதிர்பார்த்து காத்திருந்த களரம்பட்டி, அம்மாப்பாளையம் கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி வழந்ததால் மேள தாளங்களுடன் காலையில் சென்று, குருக்களை வைத்து பூஜை செய்து தண்ணீரை உற்சாகமாக வரவேற்றனர். கடந்த 2005ம் ஆண்டு பிறகு தற்போது கனமழையின் காரணமாக களரம்பட்டி ஏரியில் நீர் நிரம்பி வருவதை மக்கள் திருவிழாவை கொண்டாடுவதுபோல் மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து ஆடிப்பாடி, மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர்.

Related Stories: