கேத்தி பகுதியில் காலில் அடிப்பட்ட காட்டு மாட்டை கொடூரமாக தாக்கும் நபர்: வீடியோ வைரல்

ஊட்டி: ஊட்டி அருகே கேத்தி பகுதியில் காலில் அடிப்பட்ட காட்டுமாட்டினை ஒருவர் பொிய தடியை கொண்டு தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உள்ளன. இவற்றில் காட்டுமாடுகள் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது. இவை தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களில் உலா வருவதை காண முடியும். குறிப்பாக குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட பெங்கால்மட்டம், கைகாட்டி, முட்டிநாடு, கேத்தி உள்ளிட்ட பகுதிகள், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் நீலகிரி வன கோட்டத்தை பொறுத்த வரை காட்டுமாடுகள் - மனித தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

இவற்றை தடுக்க வனத்துைறயினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனிடையே குந்தா வனச்சரகம், கேத்தி தனியார் பொறியியல் கல்லூரி அருகே முன்னங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் சாலையோரம் நடமாடி வந்த காட்டுமாடு ஒன்றை, ஒருவர் பெரிய அளவிலான தடியை கொண்டு கொடூரமாக தாக்குகிறார். அக்கம்பக்கத்தினர் வயது முதிர்ந்த அந்த காட்டுமாட்டை தாக்க வேண்டாம் என சத்தமிடுகின்றனர். இதனை பொருட்படுத்தாமல் அதனை தாக்குகிறார். வலி தாங்க முடியாமல் அந்த காட்டுமாடு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறது.

இருந்த போதும், அதனை துரத்தி செய்து தாக்குகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், காட்டுமாட்டினை தாக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: