ஒமைக்ரான் பரவல் தீவிரம் எதிரொலி!: அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது ஜப்பான் அரசு..!!

ஜப்பான்: உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் கிருமி தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட பல அடுக்கு உருமாற்றம் பெற்றுள்ள புதிய வகை ஒமைக்ரான் கிருமி, பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் நுண்ணுயிரியின் ஆபத்தான தன்மை குறித்து தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட நாடுகள், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஒமைக்ரான் பரவி வரும் நாடுகள் உடனான போக்குவரத்தை நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகள் யாரும் நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு 30ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதம் தொடக்கத்தில் திறக்கப்பட்ட எல்லைகள் நாளை இரவு முதல் மூடப்படும் என்று கிஷிடா அறிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 9 ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் கிருமி பரவல் அதிகமுள்ள 14 நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் ஜப்பானியர்களை 10 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அந்நாடு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் முடிவை பிலிப்பைன்ஸ் அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஒமைக்ரான் பரவல் பல நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் நிலையில், 90 லட்சம் மக்களை சென்றடையும் நோக்கில் 3 நாள் தடுப்பூசி இயக்கத்தை பிலிப்பைன்ஸ் இன்று தொடங்கியுள்ளது.

Related Stories: