ஏரல் தாம்போதி பாலத்தில் வெள்ளம் வடிந்தது: வலையை கட்டி மீன்களை பிடிக்க மீனவர்கள் ஆர்வம்

ஏரல்: இரண்டு நாட்கள் மழை குறைந்ததால் நேற்று மாலை முதல் தாமிரபரணி ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏரல் தாம்போதி பாலத்தில் வெள்ளம் வடிந்தது. தாம்போதி பாலத்தின் ஓரம் புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளி விளையாடுவதால் அவைகளை பிடிக்க மீனவர்கள் வலைகளை கட்டி வைத்துள்ளனர். அக். 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அணைகளுக்கு அதிக நீர் வரத்து உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீரும், மழை காரணமாக காட்டாற்று பகுதிகளில் ஓடிவரும் வெள்ள நீர், சிற்றாற்று வெள்ளம் ஆகியவை சேர்ந்ததில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஏரல் தாமிரபரணி தாம்போதி பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இந்நிலையில் நேற்றும், நேற்றுமுன்தினமும் மழை குறைந்ததால் தாம்போதி பாலத்தில் வெள்ளம் வடிந்தது. பாலத்தை ஒட்டி தண்ணீர் நின்றது. இதையொட்டி ஆற்றில் வழக்கமாக மீன் பிடிக்கும் மீனவர்கள் இழுப்பு அதிகம் இருப்பதால் தண்ணீருக்குள் சென்று மீன் பிடிக்காமல் தாம்போதி பாலத்தின் ஓரத்தில் வலைகளை கட்டி வைத்துள்ளனர்.

புது வெள்ளத்தை கண்ட மீன்கள் கரையில் துள்ளிக் குதிப்பதால் அவைகள் மீனவர்கள் கட்டி வைத்த வலைகளில் சிக்குகின்றன. இந்த வலைகளில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை சிக்குவதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 2 நாட்கள் மழை குறைந்த போதும், அடுத்தாற்போல் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் மீண்டும் கனமழை பெய்யும் என மக்கள் பீதியில் உள்ளனர். எனவே மீண்டும் தாம்போதி பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்லும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

More