இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது கொடைக்கானல், ஊட்டி ‘வெறிச்’

*கேரளாவுக்கு திசைமாறுவதால் உள்ளூர் வர்த்தகம் பாதிப்பு

சென்னை : இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள், வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து சுற்றுலா இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் சுற்றுலாப்பயணிகளை நம்பி நடந்து வரும் உள்ளூர் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை காலங்களில் சீசனை அனுபவிக்க கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்ல கடந்த 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு, சோதனை சாவடிகளில் இ-பாஸை ஆய்வு செய்தே அனுப்பப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு சோதனை சாவடிகளில் உள்ள உதவி மையம் மூலம் இ-பாஸ் எடுக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நகரில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோதனைச்சாவடி அமைத்து இ-பாஸ் பெற்ற சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் மட்டும் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெற முயல்வதால் இ-பாஸ் இணையதளம் முடங்கி வருகிறது என புகார் எழுந்துள்ளது.

கொடைக்கானலுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 72 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள், மே மாதத்தில் 1.85 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அதே சமயம் இந்தாண்டு ஆண்டு ஏப்ரலில் 73 ஆயிரம் பேரும், இந்த மாதத்தில் நேற்று வரை 27 ஆயிரம் பேர் மட்டுமே வந்துள்ளனர். கொடைக்கானலுக்கு வழக்கமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கும். இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

கொடைக்கானலை தவிர்த்து, கேரள மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானலில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவால், நகரில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்ட பின் சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வெகுவாக குறைந்துள்ளது. இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நேற்று முன்தினம் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.

நேற்றும், குறைந்தளவே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்களில் ஒரு சிலர் கடந்த 7ம் தேதிக்கு முன்னரே ஊட்டிக்கு வந்தவர்கள். பொதுவாக மலர் கண்காட்சி நடக்கும் நாட்கள் அதற்கு முன்னர் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதன் மூலம் ஊட்டியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் வியாபாரம் நடக்கும். லாட்ஜ் மற்றும் காட்டேஜ் போன்றவைகள் நிரம்பி வழியும். ஆனால், தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்து கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்க்க படையெடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வராததால் இங்குள்ள வியாபாரிகளுக்கு வரவேண்டிய வருமானம் பாதித்துள்ளது.எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் லாட்ஜ் காட்டேஜ் உரிமையாளர்கள் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

The post இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது கொடைக்கானல், ஊட்டி ‘வெறிச்’ appeared first on Dinakaran.

Related Stories: