திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் 38 ஆயிரம் ஏக்கர் பயிர் சேதம்: வேளாண் துறை சார்பில் அரசுக்கு அறிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர் கனமழையால் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடரும் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கனமழை பெய்து வருகிறது. அதனால், பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விடாது பெய்யும் கனமழையால், உயிர் சேதம், பயிர் சேதம், பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளன. மீண்டும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்றால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. நீர்நிலைகள் எல்லாம் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. அதேபோல், சுமார் 1.82 லட்சம் விவசாய பாசன திறந்தவெளி கிணறுகள் நிரம்பியுள்ளன. மேலும், 1,500க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. மேலும், முழுமையாக நிரம்பிய ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளம் ஆகியவற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. அதோடு, மாவட்டம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் மழையால் சேதமடைந்திருக்கிறது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெருமளவில் பாதித்திருக்கிறது. பல இடங்களில் சாலையின் குறுக்கே அமைந்திருந்த சிறுபாலங்கள் மழை வெள்ளத்தால் பாதித்திருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, 33 சதவீதத்துக்கும் அதிகமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதத்துக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழகம் முழுவதும் வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேதங்களை கணக்கிடும் முதற்கட்ட பணி நடந்திருக்கிறது. அதையொட்டி, பயிர் சேதம் தொடர்பான உத்தேச அறிக்கையை மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அனுப்பியிருக்கிறது. அதில், முன் சம்பா பருவத்தில் சாகுபடி செய்திருந்த 27,300 ஏக்கர் நெற்பயிர், 1,929 ஏக்கர் சிறுதானியம், 125 ஏக்கர் பயறு வகை பயிர்கள், 367 ஏக்கர் மணிலா, 156 ஏக்கர் கரும்பு மற்றும் 8,212 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் உட்பட மொத்தம் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. மழைவெள்ளம் வடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட விளை நிலங்களில் இன்னமும் மழைவெள்ளம் வடியவில்லை. எனவே, நீரில் மூழ்கிய கதிர் முற்றி நெற்பயிர் அழுகிவிட்டன. தொடரும் மழையால், வெள்ளம் வடிவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் பயிர் சேதம் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள முழுமையான பயிர் சேதத்தை அதிகாரிகள் கணக்கிட வேண்டும். பாதிக்கப்படும் ஒரு விவசாயிகூட விடுபடாதபடி இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: