எல்லை பிரச்னையில் சாலை வசதி இல்லாததால் நாற்றுநட்டு போராட்டம்

திருமங்கலம்: திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடாஜலபதி நகர், கலைநகர் மற்றும் மதுராசிட்டி நகர் பகுதிகள். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்த பகுதியில் விடத்தகுளம் ரோட்டிலிருந்து மதுராசிட்டி நகர், கலைநகர் பகுதிக்கு செல்லும் 30அடி சாலை மண்சாலையாக இருந்து வருகிறது. மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து இடையூறாக சாலை அமைந்துள்ளது. மேலும் இரவு வேளையில் தெருவிளக்குகள் எதுவும் இல்லாததால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெங்கடாஜலபதி நகரிலிருந்து மதுராசிட்டி நகர் பகுதிக்கு செல்லும் மண்சாலை முழுவதும் மழைநீரால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் தினசரி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

இந்த சாலையின் 10 அடிபகுதி திருமங்கலம் நகராட்சிக்கும், 20 அடி திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகரை பஞ்சாயத்திற்கும் வருகிறது. இதனால் தார்சாலை யார் போடுவது நகராட்சியா அல்லது பஞ்சாயத்தா என்ற பிரச்னையில் இந்த மண்சாலை பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து நேற்று திருப்பதி வெங்கடலாஜலபதி நகர், கலைநகர், மதுராசிட்டி நகரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மண்சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்றுநட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த வடகரை பஞ்சாயத்து தலைவர் மணி மற்றும் திருமங்கலம் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தார்சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கொடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories:

More