சிறப்பு போலீஸ்காரர் காலில் பாய்ந்த 2 துப்பாக்கி குண்டுகள் அகற்றம்

கோவை : சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணியாற்றி வருபவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (34). இவர் நேற்று முன்தினம் தனது அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது, சக காவலர் ஒருவர் அங்கிருந்த துப்பாக்கிகளை சுத்தம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 இதில், எதிர்பாராதவிதமாக துப்பாக்கி சுட்டத்தில், அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த சந்தோஷின் இடது காலில் 2 துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், ஒன்று குதிகால் பகுதியிலும், மற்றொன்று பாதத்திற்கு மேல் பகுதியிலும் சென்றது. மிகவும் ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, உடனடியாக எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் மற்றும் ரத்த குழாய் பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவசர சிகிச்சையாக மயக்க மருந்து அளிக்கப்பட்டு மருத்துவமனை டீன் ஆலோசனையின் பேரில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறை இயக்குனர் வெற்றிவேல் செழியன் தலைமையில் டாக்டர் விவேகானந்தன், ரமணன், சுரேந்தர், குமரவேல், மயக்க மருந்து டாக்டர் சுதாகர் மற்றும் செவிலியர் ஜோதி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.

 சுமார் 2.30 மணி நேரத்திற்குள் காலில் நுழைந்த 2 குண்டுகளையும் அகற்றினர். ரத்தக்குழாய் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பின்றி நவீன ஊடுகதிர் (சி-ஆர்ம்) கருவியை பயன்படுத்தி குண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அரசு மருத்துவமனை டாக்டர்கள் விரைந்து செயல்பட்டதால் போலீசார் உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய மருத்துவக்குழுவினரை மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டினார்.

Related Stories: