மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றார் ஜோதிமணி

கரூர்: கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. ஜோதிமணி போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, நேற்று பகல் 12 மணியளவில் கட்சி பிரமுகர்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் திடீரென வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி  ஜோதிமணி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசின் சமூக நலன் மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சகத்திற்கு கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என கடிதம் எழுதியிருந்தேன். ஒரு ஆண்டுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்காக அனைத்து மாவட்டங்களின் கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. சில மாவட்டங்களில் முகாம் நடத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படாமல் உள்ளது’ என்றார். இதற்கிடையே அரவக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் பிரபு சங்கர், அவரது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது, ஜோதிமணி எம்பி அருகே வந்து, தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கலெக்டர், ‘மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு செல்கிறேன். நீங்களும் வாருங்கள்’ என்றார். ஆனால், எம்பி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று காலை வரை தொடர் போராட்டம் நீடித்து வந்தது. இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.பி.ஜோதிமணியிடம் உறுதியளித்தார். இதையடுத்து மதியம் 1.50 மணிக்குத் தனது தொடர் போராட்டத்தை ஜோதிமணி வாபஸ் பெற்றுக்கொண்டார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்; கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்,நேரு,, சட்டமன்ற காங் கட்சி தலைவர் செல்வபெருந்தொகை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாவுக்கரசர், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் என்னோடு துணைநின்ற கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எமது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதர,சகோதரிகள்,ஊடக நண்பர்கள்,காவல்துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: