ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

*வேலையிழந்த தொழிலாளர்கள்

*உதவித்தொகை வழங்க கோரிக்கை

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, ஆனைகுடி, கீழகாஞ்சிரங்குடி, கோப்பேரிமடம், திருப்பாலைகுடி, பனைக்குளம், நரிப்பாலம், தேவிப்பட்டிணம் சம்பை, முத்துரெகுநாதபுரம் மற்றும் சாயல்குடி அருகே வாலிநோக்கம், மாரியூர் தரவை, மூக்கையூர் என மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உப்பளங்கள், உப்பு சேகரிப்பு மற்றும் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் உப்பள பாத்திகளில் கடல்நீர் பாய்ச்சப்பட்டு உப்பு விளைவிக்கப்பட்டது. இந்தாண்டு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு விளைச்சல் அமோகமாக இருந்தது.  கடந்த செப்டம்பர் மாதம் முதலில் விளைவிக்கப்பட்ட உப்புகளை சேகரித்து தயாரிப்பு தேவைக்கு போக, உற்பத்தியாகும் உப்புகளை கிடுகு, தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்திருந்தனர். இதற்கு அடுத்தப்படியாக இரண்டாம் கட்டமாக உப்பளங்களில் உப்பு உற்பத்தி நடந்து வந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்தாலும் கூட, பிரதான மழையான வடகிழக்கு பருவமழை தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகிறது. கடந்த ஓரிரு நாட்களாக கனமழையும் பெய்து வருகிறது. இதனால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் உப்பளங்களின் கரைகளில் சேகரிக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் நூற்றுக்கணக்கான டன் உப்புகள் மழையில் நனைந்து வீணானது.

தொடர் மழையால் உப்பளத்திற்கு பாத்தி கட்டுதல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள், உப்பு சேகரிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மழைக்காலங்கள் மற்றும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் போது வேலை இழக்கும் நிலை நிரந்தரமாக இருக்கிறது. எனவே அரசு, உப்பள தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் குடும்ப நல நிதி மற்றும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: