ஆரணி கோட்டை மைதானத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பாதிப்பு-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை

ஆரணி : ஆரணி கோட்டை மைதானத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஆரணியில் உள்ள கோட்டை மைதானம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் எம்பி, எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து ₹1 கோடி மதிப்பில் கோட்டை மைதானம் அகலப்படுத்தப்பட்டு, 650 மீட்டர் நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, நடைபாதை முழுவதும் மின்விளக்குகள் அமைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், கோட்டை மைதானத்தில் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, ஓய்வு எடுப்பது, இரவு நேரங்களில் நடைபயிற்சி செய்வது என பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கோட்டை மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாமலும், பயிற்சிகள் மேற்கொள்ள முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கனமழையால் மைதானம் அருகில்  இருந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றாமல் விட்டுசென்றுள்ளனர். அதேபோல், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் விழுந்துள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் கோட்டை மைதானத்தை சுற்றி பக்க கால்வாய்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: