வளத்தோட்டம் கிராமம் அருகே பாலாற்றில் கரை ஒதுங்கிய ஹயக்ரீவர் ஐம்பொன் சிலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் கிராம பாலாற்று கரையோரம் வெள்ளப்பெருக்கு காரணமாக கரை ஒதுங்கிய இரண்டரை அடி உயரம் உள்ள  ஹயக்ரீவர் ஐம்பொன் சிலை கிடைத்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதையொட்டி, பாலாறு மற்றும் செய்யாறு அருகே வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் ஊராட்சியில், கமுக்கபள்ளம் கிராமம் பாலாற்று கரையை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், நேற்று காலை ஆற்றின் கரையோரம் சென்றார். அப்போது, கரையோரத்தில் ஒரு சாமி சிலை இருப்பதை கண்டார்.

உடனே அதை வெளியே எடுத்து சுத்தம் செய்தார். அதில், ஹயக்ரீவர் என்றழைக்கப்படும் கல்வி கடவுளின் சிலை என தெரிந்தது. இதையடுத்து விஏஓ அப்துல்பஷீத்திடம், அந்த சிலை குறித்து தெரிவித்தார்.தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டாட்சியர் லட்சுமி, வருவாய் ஆய்வாளர் பிரேமாவதி ஆகியோர் அங்கு சென்று, சிலையை பார்வையிட்டு விசாரித்தனர். அதில், அந்த சிலை, விஜய நகர பேரரசு காலத்து சிலை என்றும், சுமார் ஒன்றரை அடி உயரம் 4 அடி அகலம் கொண்டு ஐம்பொன் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிந்தது. இதையடுத்து, வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, பின்னர் அரசு விதிபடி, அந்த சிலையை வட்டாட்சியர் லட்சுமி, கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: