மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கிறார்!: கரூர் ஆட்சியரை கண்டித்து ஜோதிமணி எம்.பி தர்ணா..!!

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தன்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாக கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி கரூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்காக நலத்திட்ட முகாமை நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு கரூர் எம்.பி. ஜோதிமணி கோரிக்கை விடுத்தார்.

இதன் அடிப்படையில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 700க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படவிருக்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் சார்பில் முகாம்கள் நடத்தப்படவில்லை. இதனால் நலத்திட்ட முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்து உபகரணங்கள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு ஜோதிமணி எம்.பி கடிதம் எழுதியிருந்தார்.

இருப்பினும் ஆட்சியர், முகாம்களை நடத்தாமல் புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்சியர், ஜோதிமணி எம்.பி-யுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முகாமை நடத்தும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் ஜோதிமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: